நடிகை சமந்தா, தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, சென்ற 4 மாதங்களாக எந்த சூட்டிங்கிலும் பங்கேற்காமல் சிகிச்கையில் இருந்து வந்தார். இதற்கிடையில் அவரது யசோதா படம் ரிலீஸ் ஆனபோது மட்டும் இரண்டு பேட்டிகளை கொடுத்திருந்தார். அவற்றில், கடந்த சில மாதங்கள் தான் மிகவும் கஷ்டப்பட்டதாக கூறி அவர் அழுததை பார்த்து அவரது ரசிகர்கள் மிகவும் வருத்தப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் புராண கதையம்சம் கொண்ட சாகுந்தலம் என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. இந்த விழாவில் சமந்தாவும் பங்கேற்றார். இதையடுத்து நிகழ்ச்சியில் சாகுந்தலம் படத்தின் டைரக்டர் குணசேகர் பேசியதாவது, இப்படத்தின் உண்மையான ஹீரோ சமந்தா தான் என பாராட்டி பேசினார். இதை கேட்டதும் எமோஷனலான சமந்தா, கண்ணீர்விட்டு அழுதார்.

அதன்பின் சமந்தா பேசியதாவது, “இத்தருணத்திற்காக தான் பல நாட்களாக காத்திருந்தேன். படம் எதிர்பார்த்தவாறு ரிலீசாக வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கும். வாழ்க்கையில் எத்தனை போராட்டங்களை சந்தித்தாலும் ஒன்று மாறாது. நான் சினிமாவை நேசிக்கிறேன், அதேபோல் சினிமா என்னை மீண்டும் நேசிக்கிறது. எவ்வளவு தடைகளை சந்தித்தாலும் சினிமா மீதுள்ள காதலை நான் இழக்கவில்லை” என சமந்தா உருக்கமாக பேசினார்.