இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ்தான் போட்டியிடும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்..
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா மறைந்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் காங்கிரஸ் போட்டியிடுமா? அல்லது திமுக போட்டியிடுமா ஒரு வேலை காங்கிரஸ் கட்சி திமுகவிற்கு விட்டுக்கொடுக்குமா என்று எதிர்பார்ப்பு மற்றும் பல்வேறு குழப்பங்கள் நிலவிக் கொண்டிருந்த நிலையில், சென்னையில் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி இந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, ஈரோட்டில் காங்கிரஸ் நிற்கும். அது எங்களுடைய தொகுதி, நாங்கள் நின்ற தொகுதி வென்ற தொகுதி. நாங்கள் எங்களுடைய தோழமை கட்சிகளான திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் இருக்கக்கூடிய பொதுவுடமை கட்சிகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தை கட்சி, முஸ்லிம் கட்சி இவர்கள் தான் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று நாங்கள் கேட்க இருக்கிறோம். ஏறக்குறைய இன்றைக்கு மாலையில் அவர்களை சந்தித்து நாங்கள் பேசுவோம். எனவே காங்கிரஸ் நிற்கும், நீங்கள் காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வேண்டும், ஓட்டு வாங்கி தர வேண்டும். மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.