வெளிநாட்டில் வேலை பார்த்துவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த என்ஆர்ஐ இளைஞர் ஒருவர், தனது குடும்பத்தினரின் தொடர்ச்சியான பணத் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து ரெடிட் தளத்தில் பகிர்ந்துகொண்டுள்ள தகவல் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பல ஆண்டுகளாகத் தனது குடும்பத்தின் அனைத்துப் பொருளாதாரத் தேவைகளையும் கவனித்து வந்த போதிலும், தற்போது அண்ணனின் குடியிருப்பு வீடு வாங்குவதற்காக மேலும் ரூ. 15 முதல் 20 லட்சம் வரை தருமாறு பெற்றோர் வற்புறுத்துவதாக அவர் வேதனைத் தெரிவித்துள்ளார். குடும்ப பாசம் மற்றும் நிதி வரம்புகள் குறித்த இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் கடினமாக உழைத்து முன்னேறி வரும் அந்த இளைஞர், ஆரம்ப காலத்தில் கடும் பொருளாதாரச் சிரமங்களுக்கு இடையே தனது சொந்த முயற்சியில் ஒரு வீட்டை வாங்கி அதற்கான ஈஎம்ஐ தொகையையும் செலுத்தி வருகிறார். இதற்கிடையில், தனது மூத்த சகோதரனின் திருமணத்திற்காகப் பெரிதும் உதவி செய்துள்ள அவர், வரதட்சணை மற்றும் செலவுகளுக்காக 10 லட்சம் ரூபாயை நேரடியாகவும், மேலும் 9 லட்சம் ரூபாயைக் கடனாகவும் வழங்கியுள்ளார்.
அந்தத் தொகையை இதுவரை குடும்பத்தினர் திருப்பித் தராத நிலையிலும், தற்போது சுமார் 1.1 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஃபிளாட் வாங்குவதற்கு ஆரம்ப கட்டத் தொகையாகப் பெரும் பணத்தைக் கேட்டுப் பெற்றோர் நச்சரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடும்பத்தின் இந்தக் தொடர் அழுத்தங்களாலும், தந்தைக்கேற்பட்ட கடன்களை அடைத்தது மற்றும் கோவிட் காலச் சிக்கல்களுக்கு உதவியது போன்ற கடந்த கால உதவிகளையும் சுட்டிக்காட்டி அவர் இணையத்தில் உதவி நாடியுள்ளார். இந்தக் பதிவைப் பார்த்த நூற்றுக்கணக்கான நெட்டிசன்கள், குடும்பத்தினர் அவரை ஒரு ‘ஏடிஎம் மெஷின்’ போலப் பயன்படுத்துவதாகவும், இனியும் இதற்கு இடமளிக்காமல் உறுதியாக ‘இல்லை’ என்று சொல்லப் பழக வேண்டும் என்றும் தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். பெற்றோர் ஒரு பிள்ளையை மட்டும் கஷ்டப்படுத்தி மற்றொரு பிள்ளையின் வாழ்க்கையை வசதியாக்குவது முறையற்றது என்று பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.
