பொறியியல் கனவுகளுடன் ஜே.இ.இ தேர்வுக்குத் தயாராகி வந்த 17 வயது சிறுவன், நள்ளிரவில் அனுப்பிய ஒரு சிறிய X பதிவு மூலம் தனது வாழ்க்கையின் திசையையே மாற்றியமைத்துள்ளார். பிரபல தொழில்முனைவோர் ராஜ் ஷமானியின் வழிகாட்டுதலில் தொடங்கி, தனது 22 வயதிலேயே 1 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்து சாதனை படைத்துள்ள ஆதித்யா பன்சாலின் சுவாரசியமான வெற்றிப் பயணம் பற்றி பாப்போம்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான நடுத்தரக் குடும்பத்து மாணவர்களைப் போலவே ஆதித்யா பன்சாலும் ஜே.இ.இ தேர்வு, பொறியியல் படிப்பு, அதன் பின் ஒரு நல்ல வேலை என்ற வழக்கமான பாதையில் செல்லவே எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், அவருக்கு தொழில்முனைவு  சுய முன்னேற்றம் மற்றும் ஆன்லைன் வணிகம் ஆகியவற்றின் மீதே ஆர்வம் அதிகம் இருந்தது.

பணம் சம்பாதிக்கக் பல வழிகளில் முயன்ற அவர், கிராஃபிக் டிசைனிங், வெப்சைட் டெவலப்மென்ட் என பலவற்றில் இறங்கித் தோற்றுப் போயிருந்தார். “நான் நீண்ட காலமாகப் பணம் சம்பாதிக்க முயற்சித்து வந்தேன். கிராஃபிக் டிசைன், வெப் டெவலப்மென்ட் என பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தன” என்று பன்சல் தனது கடந்த காலத்தை நினைவுகூருகிறார்.

 

ஒரு நாள் இரவில், பிரபல தொழில்முனைவோரும் பாட்காஸ்டருமான ராஜ் ஷமானியின் வீடியோ ஒன்றை ஆதித்யா பார்த்துள்ளார். அந்த வீடியோவில் உள்ள கருத்துக்களைத் தொகுத்து ஒரு ட்விட்டர் த்ரெட்டாக  மாற்ற முடிவெடுத்தார். கூகுள் டாக்ஸில் பல மணி நேரம் உட்கார்ந்து அதை எழுதிய அவர், நள்ளிரவு 10:41 மணிக்கு ராஜ் ஷமானிக்கு நேரடிச் செய்தி  அனுப்பினார். அடுத்த நாள் அதிகாலை 3:53 மணிக்கு ராஜ் ஷமானியிடமிருந்து பதில் வந்தது. “இதை நான் பதிவேற்றுகிறேன், இது நன்றாக வேலை செய்தால் எனது ட்விட்டர் பதிவுகளுக்கு உன்னை வேலையில் அமர்த்துகிறேன், சரியா?” என்று ஷமானி பதிலளித்திருந்தார்.

ஆதித்யா எழுதிய அந்தப் பதிவு சுமார் 1,200 லைக்குகளை அள்ளியது. அது தனது சிறந்த படைப்பு இல்லை என்று ஆதித்யா கருதினாலும், அந்தத் டீனேஜ் பையனிடம் திறமை இருப்பதை உணர்ந்த ஷமானி அவருக்கு வாய்ப்பளித்தார். “எனக்கு அப்போது 17 வயது. டிகிரி இல்லை. அனுபவம் இல்லை. காட்டுவதற்கு எந்த சாதனையும் இல்லை. ஆனாலும் அவர் என் மீது நம்பிக்கை வைத்து என்னை வேலைக்கு அமர்த்தினார்” என்று பன்சல் குறிப்பிடுகிறார். தனக்கு அப்போது வங்கி கணக்கு இல்லாததால், ஷமானி தனது முதல் சம்பளத்தை அமேசான் கிஃப்ட் கார்டுகள் மூலமாகவே வழங்கினார்.

மேலும், ஷமானி அவருக்குத் தேவையான தகவல்களை வழங்குவதுடன், பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்னது போன்ற சிறிய விஷயங்களையும் கவனித்துக் கொண்டது தனக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்ததாக ஆதித்யா கூறுகிறார். காலப்போக்கில் ஷமானிக்கு முழுநேரக் குழு தேவைப்பட்டதால் அந்த ஒத்துழைப்பு நின்றாலும், ஷமானி வழங்கிய நற்சான்றிதழ்  ஆதித்யாவுக்குப் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுத் தந்தது.

அதன் பிறகு திரும்பிப் பார்க்காத ஆதித்யா, இதுவரை 45-க்கும் மேற்பட்ட நிறுவனர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். தனது 22 வயதிற்குள்ளாகவே 1 கோடி ரூபாய் வரை சம்பாதித்து இளம் சாதனையாளராக உருவெடுத்துள்ளார். “நன்றி ராஜ் ஷமானி. அந்த டிவிட்டர் செய்திதான் நான் எழுதியதிலேயே மிகச் சிறந்த விஷயம்” என்று அவர் நன்றியுடன் கூறுகிறார். இந்தச் செய்தி தற்போது சமூக வலைதளங்களில் பல இளைஞர்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகப் பேசப்பட்டு வருகிறது.