கோயம்புத்தூர் மாவட்டம் தெற்கு எம்எல்ஏ மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் சமீபத்தில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் பேசிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது, திருவள்ளுவரும், திருவருட்பிரகாச வள்ளலாரும் இந்து மதத்தில் பிறந்தவர்கள். இந்த ஆன்மீக ஞானத்தை மக்களுக்கு போதித்தவர்கள். எப்போதும் திருநீர் அணிந்து காணப்படும் வள்ளலாரையே திருநீர் இல்லாத படத்துடன் வெளியிட்டு அவர் அடையாளத்தை மறைப்பவர்கள்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருவள்ளுவரின் அடையாளத்தை மறைப்பதில் ஆச்சரியம் இல்லை. திராவிடம் என்ற பெயரால் தமிழ் தமிழர்களின் அடையாளத்தை மறைப்பவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் இருக்கும் காலகட்டம். திருக்குறளில் ஆன்மீக ஞான கருத்துக்கள் பொதிந்துள்ளன. ஆனால் திருவள்ளுவரின் ஆன்மீக அடையாளத்தை அழித்து இந்து மத அழிப்பில் லட்சியமாகக் கொண்டு திமுக காலம் காலமாக செயல்பட்டு வருகிறது. திருவள்ளுவரையும்,  திருக்குறளையும் களவாட முயற்சிப்பது திமுக கூட்டம் தான்.

திருவள்ளுவர் சிலையை கன்னியாகுமரியில் அமைக்க அடிக்கல் நாட்டியவர் ஏக் நாத் ராணடே. நாங்கள் எப்பொழுதும் திருவள்ளுவரைப் போற்றுகிறோம் திருவள்ளுவரை களவாட  தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருக்கும் ஒரு கூட்டம் திரும்பத் திரும்ப மற்றவர்கள் மீது பழியை சுமத்தி வருகிறது. திருக்குறளை உண்மையிலேயே படிப்பவர்கள் திருவள்ளுவர் தெய்வப் புலவர் என்பதை உணர்வார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது