தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் வெப்பநிலையானது 100 டிகிரியையும் தாண்டி உள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். வெயிலால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் கூட தவித்து பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இப்படி வெயில் அதிகமாக இருப்பதால் குளிர்ந்த காற்றுக்காக தங்கள் வீடுகள் மற்றும் வாகனங்களில் மக்கள் ஏசிகளை வாங்கி மாட்டி வருகின்றனர்.
பெரும்பாலும் இந்த கோடை வெயில் காலத்தில் ரயில் மற்றும் பேருந்தில் பயணிப்பவர்கள் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு சொகுசான பயணத்திற்காக ஏசி கோட்சுக்களையே விரும்புகிறார்கள். இந்த நேரத்தில் தமிழக போக்குவரத்து துறை பேருந்துகளில் உள்ள ஏசியை நீக்கி வருகிறது. ஏனெனில் பேருந்துகளில் இயங்கும் ஏசி இயந்திரங்களை பராமரிப்பதற்கு அதிகம் செலவிட நேர்வதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த செலவை குறைக்கும் நடவடிக்கையாக பேருந்துகளில் இயங்கும் ஏசி இயந்திரங்கள் நீக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதோடு கும்பகோணம் போக்குவரத்தில் பல பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளது. இதை மீண்டும் இயக்குவதற்கு ஏசி நீக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.