ஒரு சாமானிய மனிதன் தன் வாழ்நாளில் ஆகச்சிறந்த போராட்டத்தை எப்போது சந்திக்கிறான் தெரியுமா? தன் சொந்த உழைப்பில் சேர்த்த பணத்தை, ஒரு அரசு அலுவலகத்தில் தார்மீகமாகப் பெற வேண்டிய சான்றிதழுக்காகவோ அல்லது சேவைக்காகவோ லஞ்சமாகக் கொடுக்க மறுத்து, அதிகார வர்க்கத்தின் முன்னால் ஏழை போல் அழுது நிற்கும்போதுதான். மக்களின் இந்த நீண்ட நாள் கண்ணீருக்கும் ஏமாற்றத்திற்கும் ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க, தமிழக அரசு இப்போது ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சப் பேயை வேரறுக்க, தமிழகத் தலைமைச் செயலாளர் சாய் குமார் ஒரு அதிரடியான சுற்றறிக்கையைப் பிறப்பித்துள்ளார். இனி எந்தவொரு அரசு அலுவலகத்திலும், எந்தவொரு அதிகாரியும் சாமானிய மக்களிடம் காசு கேட்டு கை நீட்ட முடியாது. அப்படி நீட்டினால், அவர்களின் முகமூடியைக் கிழிக்க ஒரு பிரத்தியேக வாட்ஸ்அப் எண் றிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் புகார்களை நேரடியாகத் தெரிவிக்க வேண்டிய அந்த எண்: 9498180936.

தலைமைச் செயலாளரின் இந்த உத்தரவு வெறும் காகிதத்தோடு நின்றுவிடப் போவதில்லை. தமிழகத்தின் மூலை முடுக்கில் இருக்கும் அனைத்து அரசுத் துறைகளிலும், பொதுமக்கள் எளிதில் பார்க்கும் வகையில் இந்த வாட்ஸ்அப் எண் கட்டாயமாகப் பொறிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, இதனுடன் லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பும் இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மக்கள் மத்தியில் உடனடியாக அடையாளப்படுத்தப்படுவார்கள் என்ற அச்சம் இப்போது அரசு வட்டாரங்களில் தொற்றிக்கொண்டுள்ளது.