சிபிஎஸ்இ 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழி கட்டாயம் என்ற சுற்றறிக்கை தொடர்பாக தமிழக அரசியல் களத்தில் மீண்டும் மொழிக் கொள்கை விவாதம் தீவிரமடைந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி அளித்த பதில் தற்போது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “நாங்கள் தொடர்ந்து தெளிவாகச் சொல்லி வருவது இருமொழிக் கொள்கைதான். எந்தக் குழந்தைக்கும் மொழி என்பது பாரமாக மாறிவிடக் கூடாது” என்று தெரிவித்தார். மாணவர்களின் கல்விச் சுமையை அதிகரிக்கும் எந்த நடவடிக்கையும் ஏற்க முடியாது என்பதே திமுகவின் நிலைப்பாடு என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையடுத்து, CBSE-யின் மூன்றாவது மொழி தொடர்பான சுற்றறிக்கையை தமிழக அரசு ஏன் எதிர்க்கவில்லை? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கனிமொழி, “ஒன்றிய அரசை எதிர்த்து எதுவுமே பேசுவதில்லை என்ற நிலைப்பாட்டை தவெக அரசு எடுத்திருக்கிறது. அவர்களிடமிருந்து இதை எதிர்பார்ப்பதே தவறு” என்று விமர்சித்தார்.
கனிமொழியின் இந்தக் கருத்து தற்போது அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மொழிக் கொள்கை, கல்விக் கொள்கை மற்றும் மாநில உரிமைகள் தொடர்பான விவகாரங்கள் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளன. அவரது பேச்சு சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நீண்ட காலமாக இருமொழிக் கொள்கை முக்கிய அரசியல் விவாதமாக இருந்து வரும் நிலையில், CBSE சுற்றறிக்கையைத் தொடர்ந்து மீண்டும் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றன.
