தமிழகத்தில் பல இடங்களில் உள்ள உணவகங்களில் கெட்டுப்போன உணவை பதப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். அதனை சாப்பிடும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என பலருக்கும் உடல் நலக்குறைவு ஏற்படுவது மட்டுமல்லாமல் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. அதன்படி சமீபத்தில் நாமக்கல் மாவட்டத்தில் தனியார் ஓட்டலில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிர் இழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.
இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளிலும் சவர்மா மற்றும் கிரில் சிக்கன் போன்ற உணவுகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஹோட்டல்களும் தூய்மையான முறையில் தான் உணவு சமைக்கிறார்களா எனவும் உணவை பதப்படுத்த சரியான பிரீசிங் வசதி உள்ளதா என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் தூய்மையான முறையில் சமைக்காத உணவகம் மற்றும் தரமற்ற உணவினை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.