
தமிழக வெற்றிக்கான தலைவர் விஜய் நேற்று பரந்தூர் சென்ற நிலையில் புதிய விமான நிலையத்தை வேறு ஏதாவது இடத்தில் அமைக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தார். அதாவது பரந்தூரில் விமான நிலையம் அமைத்தால் விளைநிலங்கள் அழியும் என்பதால் விளை நிலங்கள் இல்லாத ஒரு பகுதியில் ஏர்போர்ட்டை அமைத்துக் கொள்ளுமாறு விஜய் கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை புதிய ஏர்போர்ட்டை வேறு இடத்தில் அமைக்கலாம் என்று விஜய் கூறிய நிலையில் அது எந்த இடத்தில் என்பதையும் அவரே கூற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, இந்தியாவில் இருக்கும் ஏர்போர்ட்டுகளில் சென்னை ஏர்போர்ட் மட்டும் தான் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் இருக்கிறது. அதே நேரத்தில் டெல்லியில் 5000 ஏக்கர் நிலப்பரப்பிலும், ஹைதராபாத்தில் 5000 ஏக்கர் நிலப்பரப்பிலும், பெங்களூருவில் 4000 ஏக்கர் நிலப்பரப்பிலும் இருக்கிறது. சென்னை ஏர்போர்ட்டில் 2.50 கோடி பயணிகளை மட்டும் தான் கையாள முடியும். இது அடுத்த பத்து வருடங்களில் 10 கோடியாக அதிகரிக்க கூடும். பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக இந்தியாவில் 73 விமான நிலையங்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது அது 148 கோடியாக அதிகரித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தமிழகத்திற்கு புதிய விமான நிலையம் வேண்டுமென்று கேட்டு நிலையில் அதிமுக ஆட்சிக்காலத்தின் போது மத்திய அரசுக்கு ஏர்போர்ட் கட்ட தேர்வு செய்து பரந்தூர் மற்றும் மாமண்டூர் ஆகிய இரு ஊர்களின் பெயர்களை அனுப்பியது.
அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பரந்தூர் மற்றும் பன்னூர் ஆகிய இரு ஊர்களின் பட்டியலை அனுப்பியது. மத்திய அரசு மாநில அரசு கொடுத்த பட்டியலில் இருந்து தான் விமான நிலையம் அமைக்கும் இடத்தை தேர்வு செய்தது. ஒருவேளை விஜய் பொறுப்பான அரசியல்வாதியாக இருந்தால் அவர் அடுத்தது எந்த இடத்தை தேர்வு செய்வார். சென்னையில் விமான நிலையம் வேண்டுமென்றால் எங்கு அமைக்கலாம் என்பதை அவரே கூற வேண்டும். ஆக்கப்பூர்வமாக பிரச்சனையை கையாள வேண்டும் என்றால் அதற்கு தீர்வு கொடுப்பவர்கள் தான் சிறந்த அரசியல்வாதியாக இருக்க முடியும். விஜய் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்ற போகிறாரா அல்லது நெருப்பை அணைக்கப் போகிறாரா. மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசை குறை சொல்வது தவறு என்று கூறினார்.