தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதல் மாநாட்டின் போது குடும்ப அரசியல் செய்துவரும் காட்சி என்று திமுகவை விமர்சித்திருந்தார். ஏற்கனவே தமிழ்நாட்டில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுக வாரிசு அரசியல் செய்து வருவதாக விமர்சித்து வரும் நிலையில் தற்போது சமூக ஆர்வலர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தமிழ்நாட்டில் வாரிசு அரசியல் குறித்து அவர் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் எந்த கட்சியில் தான் வாரிசு அரசியல் இல்லை.

திமுக வாரிசு அரசியல் செய்வது மட்டும்தான் தற்போது பிரச்சினையாக இருக்கிறதா.? எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது அவர் காலமானதால் அவருடைய மனைவி ஜானகி அம்மாள் முதல்வராகப்பட்டார். இது வாரிசு அரசியல் இல்லை என்றார்கள். பின்னர் எம்ஜிஆரின் வாரிசு நான் தான் என்று கூறிய ஜெயலலிதா அம்மையார் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் அது வாரிசு அரசியல் கிடையாதா.? தமிழ்நாட்டில் பாமக கட்சியை ஆரம்பித்தது மருத்துவர் ராமதாஸ். தற்போது அந்த கட்சியின் தலைவராக அவருடைய மகன் அன்புமணி ராமதாஸ் இருக்கும் நிலையில் ‌ இது வாரிசு அரசியல் கிடையாதா.? அதன் பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தவர் ஜிகே மூப்பனார். தற்போது அந்த கட்சியின் தலைவராக அவருடைய மகன் ஜி.கே வாசன் இருக்கிறார். இந்த இரு கட்சிகளிலும் இருக்கும் வாரிசுகள் தேர்தலை கூட சந்திக்காமல் நேரடியாக ராஜ்யசபை மூலம் மந்திரி பதவி கூட வகித்துள்ளனர்.

அதன் பிறகு திமுகவில் வாரிசு அரசியல் என்று கூறிவிட்டு அக்கட்சியில் இருந்து வெளியே வந்த வைகோ மதிமுக என்ற கட்சியை ஆரம்பித்த நிலையில் தற்போது அதன் தலைவராக அவருடைய மகன் துரை வைகோ இருக்கிறார். இதைத்தொடர்ந்து தேமுதிக கட்சியில் விஜயகாந்த் மறைந்த பிறகு தற்போது கட்சியின் பொதுச் செயலாளராக அவருடைய மனைவி பிரேமலதா விஜய்காந்த் இருக்கும் நிலையில் அவருடைய மகன் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இந்த கட்சியின் பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தம்பி சுதீஷ் என்பவர் இருக்கிறார்.

அதன் பிறகு சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர்களின் மகன்கள் அரசியலில் போட்டியிட்டதெல்லாம் வாரிசு அரசியல் கிடையாதா.? அதன்பிறகு புதிய தமிழகம் என்ற கட்சியை கிருஷ்ணசாமி நடத்தி நிலையில் ஜான்பாண்டியன் தனியாக ஒரு கட்சி நடத்துகிறார். இவர்கள் எல்லோரும் தங்களுடைய வாரிசுகளை கட்சியின் முக்கிய பொறுப்புகளில் வைத்துள்ளனர். இது எல்லாம் வாரிசு அரசியல் கிடையாதா.? இதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருடைய மைத்துனருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது.

அவருடைய மனைவி கயல் விழிக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுத்தது, இது எல்லாம் வாரிசு அரசியல் கிடையாதா.? மேலும் இத்தனை கட்சியில் வாரிசு அரசில் இருக்கும் போது இதையெல்லாம் விட்டுவிட்டு திமுகவை மட்டும் குறிப்பிட்டு பேசுவது ஏன் ப்ரோ என்று விஜய்யை மறைமுகமாக கேட்டுள்ளார். மேலும் இத்தனை கட்சிகள் குடும்ப அரசியல் செய்யும்போது தமிழ்நாட்டில் வருகிற 2026 தேர்தலில் விஜய் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பார் என்றும் அவர் கேள்வி எழுப்பியது போல் பேசி உள்ளார்.