தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மறுசீரமைக்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர்களும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இது தொடர்பான அரசாணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கார்கலா உஷா வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள், பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் டிஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். அந்த வகையில் 4000 உதவி பேராசிரியர்களுக்கு 15,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடைபெற இருக்கிறது. அதன்பிறகு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கு தனிக்குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு ஆசிரியர் பணியிடங்களில் முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக 39 பரிந்துரைகளை அரசுக்கு தெரிவித்தது. இந்த பரிந்துரைகளை அரசு சிறிய மாற்றத்துடன் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், டிஎன்பிஎஸ்சி விதிப்படி ஆசிரியர் தேர்வு வாரியமும் மறு சீரமைக்கப்பட இருக்கிறது. அதன்படி நூலகப் பிரிவு, சான்றிதழ் சரிபார்ப்பு பிரிவு, தேர்வு நடத்துதல் பிரிவு, ரகசிய பிரிவு, குறைதீர்க்கும் பிரிவு மற்றும் தகவல் மையப்பிரிவு, தகவல் அறியும் உரிமை பிரிவு, சட்ட பிரிவு, அறிவிப்பு பிரிவு, நிர்வாகப் பிரிவு, கணக்கு பிரிவு, தொழில்நுட்ப பிரிவு ஆகிய 11 துறைகள் மறுசீரமைக்கப்பட இருக்கிறது. இதன் செயல்பாடுகளால் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வெளிப்படை தன்மை மேம்படுத்தப்படும். டிஎன்பிஎஸ்சியில் இருப்பது போன்று தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பகுதியில் உருவாக்கப்பட்டு அதன் பதவியில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார்.
இதுபோக மாவட்ட வருவாய் அதிகாரி, துணை ஆட்சியர், இணை மற்றும் துணை இயக்குனர், உதவி கணக்கு அதிகாரி மற்றும் மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட 71 பணியிடங்களும் தனியாக உருவாக்கப்பட இருக்கிறது. இதனையடுத்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கொள்கைகளை தீர்மானிக்க ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தலைவராகவும், பள்ளிக்கல்வி இயக்குனர்கள் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட இருக்கிறார்கள். இதில் 4 முன்னாள் அதிகாரிகளும் இடம் பெறுவார்கள். மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களை தேர்வு செய்ய தரமான வினாத்தாள்கள் உருவாக்கப்பட இருக்கிறது. மேலும் இதற்கான பாடத்திட்டங்கள் ஐஐடி மற்றும் புகழ்பெற்ற பல்கலைக்கழக நிபுணர்களால் வடிவமைக்கப்பட இருக்கிறது.