தமிழக சட்டப்பேரவையில் நேற்று பால்வளத்துறை மானியம் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழகத்தில் ஆன்லைனில் ஆவின் பால் பொருட்களை விற்பனை செய்வதற்கான வசதி செய்யப்படும் என அறிவித்துள்ளார். மேலும் அம்பத்தூர் பால்பண்ணை வளாகத்தில் புதிய சாக்லேட் உற்பத்தி யூனிட்டுகள் நிறுவப்படும். பால் தரத்திற்கு ஏற்ப பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

தொடக்கப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பணியாளர்களின் நலன் பேணப்படும். பால் உற்பத்தியில் எருமை மாடுகள் முக்கிய பங்கு வகிப்பதால் எருமை கன்று வளர்ப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். பால் உற்பத்தியை அதிகரிக்க நபார்டு மூலம் இரண்டு லட்சம் வரை கடன் வழங்கப்படும். புதிய தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தும் வகையில் பால் பண்ணை வர்த்தக கண்காட்சி நடத்தப்படும். திட்டக்குடியில் 25 கோடியில் கால்நடை தீவன ஆலை அமைக்கப்படும் என பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.