கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான விபத்து தொடர்பாக, தமிழக அரசியல் களம் தற்சமயம் மீண்டும் சூடேறியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி அவர்கள் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் தற்போதைய ஆட்சியாளர்களைக் கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அன்று விபத்து நடந்தபோது களத்தில் நின்று நள்ளிரவிலும், பகலிலும் கரூர் பொதுமக்களைக் காப்பாற்றியது யார் என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். விபத்து நடந்த செய்தி கிடைத்த உடனேயே கரூர் நோக்கி விரைந்து வந்து, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அவசர உயர்தர மருத்துவ சிகிச்சைகளை ஏற்பாடு செய்து தந்தது அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அன்றைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்தான் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து தற்போதைய முதலமைச்சர் விஜயைக் மறைமுகமாகத் தாக்கிப் பேசியுள்ள அவர், கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் மயங்கி விழுந்த அந்த இக்கட்டான சூழலில், வெறும் தண்ணீர் பாட்டில்களை மட்டும் வீசி எறிந்துவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல் தனது மேடைப் பேச்சைத் தொடர்ந்து நடத்தியது யார் என்று காரசாரமாகக் கேட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் பலர் உயிரிழப்பு விபரங்களைக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காமல் பயந்துபோய்த் தனி விமானம் ஏறி ஓடியது யார் என்பது கரூர் மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்றும் அவர் சாடியுள்ளார்.

“ஓடு.. ஓடு.. ஓடு…” என்று முத்தாய்ப்பாக அவர் முடித்துள்ள இந்த எக்ஸ்  பதிவு,  இணையத்தில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது.