விஞ்ஞானிகளால் இன்னும் அடையாளம் காண முடியாத விசித்திரமான மர்மப் பொருட்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தங்களிடம் இருப்பதை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் தலைவர் ஜாரெட் ஐசக்மேன் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளார். ‘தி ஜாக் கார்டன்’ பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் ‘பூர்சு’ என்ற திட்டத்தின் கீழ், பல ஆண்டுகளாக ரகசியமாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்த பறக்கும் தட்டுகள் மற்றும் விசித்திரப் பொருட்கள் தொடர்பான ஆவணங்கள் பொதுமக்களின் பார்வைக்காகத் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
எங்களிடம் உள்ள சில குறிப்பிட்ட புகைப்படங்களின் தரவுகளை வைத்து ஆய்வு செய்தபோதும், அதில் இருக்கும் விசித்திரப் பொருட்கள் என்னவென்று எங்களால் கண்டறிய முடியவில்லை என்றும், அவை முற்றிலும் விடைதெரியாத மர்மமாகவே நீடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசு நிறுவனங்களின் கோப்புகளில் புதைந்து கிடந்த இந்தத் தரவுகளைப் பொதுவெளியில் பகிர்ந்து மக்கள் பகுப்பாய்வு செய்யட்டும் என்ற அடிப்படையில் டிரம்ப் உத்தரவிட்டதைச் சுட்டிக்காட்டிய ஜாரெட் ஐசக்மேன், அதே நேரத்தில் விழுந்து நொறுங்கிய விண்கலங்களோ அல்லது ஏலியன்களின் உடல்களோ அமெரிக்க அரசிடம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
நாசாவிடம் மர்மப் பொருட்களின் புகைப்படங்கள் இருந்தாலும், அவை வேற்றுக்கிரகவாசிகள் தான் என்பதற்கான நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். இதற்கிடையே, பென்டகன் பாதுகாப்புத் துறை அண்மையில் வெளியிட்ட 4-வது கட்ட ஆவணங்களில், கடந்த 1996-ஆம் ஆண்டு ‘கொலம்பியா’ விண்கலத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் பூமியின் சுற்றுப்பாதையில் எடுத்த மர்மப் பொருள் ஒன்றின் அரிய புகைப்படங்களும் அடங்கியுள்ளன. நம் வாழ்நாளுக்குள்ளேயே விண்வெளியில் உயிரினங்கள் இருப்பதை மனிதகுலம் கண்டறிய மிக அதிக வாய்ப்புகள் உள்ளதாக நாசா தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
