
2ஆவது டி20 போட்டியில் இந்தியாவை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி..
இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 1:0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது போட்டி புனேயில் நேற்று இரவு நடைபெற்றது. இந்திய அணியில் காயத்தால் சாம்சன் தொடரிலிருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக ராகுல் திரிபாதி ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டார். அதேபோல ஹர்ஷல் படேலுக்கு பதிலாக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இடம்பெற்றார். இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி இலங்கை அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய நிசாங்கா 33 ரன்களும், குசால் மெண்டிஸ் அதிரடியாக 31 பந்துகளில் (3 பவுண்டரி, 4 சிக்ஸர்) 52 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர்.. அதன்பின் வந்த ராஜபக்சே (2), தனஞ்செய டி சில்வா (3), ஹசராங்கா (0) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தபோதிலும், அசலங்கா 19 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்தார். இலங்கை அணி 16 ஓவரில் 138 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தவித்த நேரத்தில் கடைசியாக கேப்டன் சானகா அதிரடியாக 22 பந்துகளில் 6 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 56* ரன்கள் குவித்தார். மேலும் கருணாரத்னே 11* ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இதனால் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 206 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளும், அக்சர் படேல் 2 விக்கெட்டுகளும், சாஹல் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய இசான் கிஷன் (2) மற்றும் சுப்மன் கில் (5) இருவரையும் 2ஆவது ஓவரில் ரஜிதா அவுட் செய்து வெளியேற்றினார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 5 ரன் எடுத்தநிலையில், மதுசன்கா வீசிய 3ஆவது ஓவரின் முதல் பந்தில் கீப்பர் குசால் மெண்டிஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின் வந்த ஹர்திக் பாண்டியாவும் 12 ரன்னில் அவுட் ஆனார். இந்தியா அணி 9.1 ஓவரில் 57 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
அப்போது மறுமுனையில் பொறுமையாக ஆடிக்கொண்டிருந்த அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் மற்றும் அக்சர் படேல் இருவரும் ஜோடி சேர்ந்தனர். சூர்யா குமார் யாதவ் அதிரடி காட்டாமல் சற்று பொறுப்பாக ஆடிவந்த நிலையில் அக்சர் பட்டேல் அதிரடியை காட்டினார். குறிப்பாக வணிந்து ஹசரங்கா வீசிய 14 வது ஓவரில் அக்சர் பட்டேல் முதல் 3 பந்துகளில் தொடர்ந்து ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி இந்திய ரசிகர்கள் மனதில் நம்பிக்கையை விதைத்தார். அதேபோல அந்த ஓவரில் சூர்யாவும் ஒரு சிக்சர் பறக்கவிட்டார். அதனால் அந்த ஓவரில் 26 ரன்கள் கிடைத்தது.
அதன்பின் 15 வது ஓவரிலும் 2 சிக்ஸ் உட்பட 15 ரன்கள் இந்தியா அணிக்கு கிடைத்தது. அந்த ஓவரில் அக்சர் படேல் 20 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதைத் தொடர்ந்து 16வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் அரை சதம் (36 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 51 ரன்கள்) கடந்த நிலையில், அதே ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து மாவியுடன் அக்சர் பட்டேல் கை கோர்த்தார். இந்திய அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 50 ரன்கள் தேவைப்பட்ட போது மதுசன்கா வீசிய 18 வது ஓவரில் மாவி யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கடைசி 3 பந்துகளில் சிக்ஸ், பவுண்டரி, சிக்ஸ் என விளாச 17 ரன்கள் கிடைத்தது.
கடைசி 12 பந்தில் வெற்றிக்கு 33 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் ரஜிதா ஒரு பவுண்டரி உட்பட 12 ரன்கள் கொடுத்தார். இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட இந்திய அணியால் 4 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி ஓவரை கேப்டன் சானகா சிறப்பாக வீசி அக்சர் படேல் விக்கெட்டையும், மாவி விக்கெட்டையும் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
அக்சர் படேல் 31 பந்துகளில் (6 சிக்ஸர், 3 பவுண்டரி) 65 ரன்கள் எடுத்து போராடியும் பலன் கிடைக்கவில்லை. மாவியும் போராடி 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். உம்ரான் மாலிக் 1 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இலங்கை அணி தரப்பில் மதுசங்கா, ரஜிதா, ஷானகா ஆகியோர் தலா 2 விக்கெட்களும், கருணாரத்னே, ஹசராங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்..
இலங்கை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இரு அணிகளும் 1:1 என சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையே 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி ராஜ்கோட்டில் 7ஆம் தேதி நடைபெற உள்ளது.
India gave it their all, but Sri Lanka have drawn level in the series with a win in a high-scoring game in Pune 👏#INDvSL | 📝 Scorecard: https://t.co/Kbt60yEhau pic.twitter.com/LjeGIagn5f
— ICC (@ICC) January 5, 2023