இந்திய கிரிக்கெட் உலகின் இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கரின் விமர்ச்சனங்களுக்குக் கடுமையாகப் பதிலடி கொடுத்துவிட்டதாக சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவிய ஒரு செய்தி தற்போது முற்றிலும் பொய்யானது என அம்பலமாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்து பாப்போம்.
இளம் வீரர்களான வைபவ் சூர்யவன்ஷி மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரின் சமீபகால மைதான நடவடிக்கைகளைக் கண்டித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் தனது எக்ஸ் பக்கத்தில் சில விமர்சனங்களை முன்வைத்திருந்தார். “இதுபோன்ற முறையற்ற நடத்தைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டால், அதுவே அவர்களது வழக்கமாக மாறிவிடும்” என்று அவர் பதிவிட்டிருந்தார்.
இதற்குக் பதிலளிக்கும் விதமாக, வைபவ் சூர்யவன்ஷியின் பெயர் மற்றும் ப்ளூ டிக் சரிபார்ப்பு குறியுடன் இருந்த எக்ஸ் கணக்கு ஒன்றில் இருந்து ஒரு பதிவேற்றம் வெளியானது. அதில், “போதும் இந்த நச்சுத்தன்மையும் முதிர்ச்சியற்ற வாதங்களும். மற்றவர்களுக்கு நீதி வழங்குவதற்கு முன் முழு உண்மையை அறிந்து கொள்ளுங்கள்” என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த பலரும் இளம் வீரர் வைபவ்தான் நேரடியாக மஞ்சரேக்கரை சாடியுள்ளார் என்று நம்பி விவாதிக்கத் தொடங்கினர்.
ஆனால், இந்தச் சர்ச்சையின் பின்னணியைத் துப்பறிந்ததில் உண்மை வேறாக இருந்தது. இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு எக்ஸ் (X) தளத்தில் அதிகாரப்பூர்வ கணக்கு எதுவும் கிடையாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் இன்ஸ்டாகிராம் தளத்தில் மட்டுமே தீவிரமாக இயங்கி வருகிறார். ஆனால், அங்கும் கூட மஞ்சரேக்கரின் விமர்ச்சனங்களுக்கு எதிராக எந்தவொரு கருத்தையும் அவர் பதிவிடவில்லை.
Enough with the toxicity, immature arguments, and salty behaviour. Know the full story before preaching others🤐
— Vaibhav Sooryavanshi (@Vaibhavsooryava) August 26, 2026
வைபவ் சூர்யவன்ஷி பெயரில் வைரலான அந்தப் பதிவை வெளியிட்டது அவருடைய அதிகாரப்பூர்வமற்ற ‘ஃபேன் பேஜ்’ அதாவது ரசிகர் பக்கம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பக்கத்தின் பயோ விவரங்களிலேயே அது ஒரு ரசிகர் பக்கம் என்றும், கிரிக்கெட் வீரருக்கும் அதற்கும் நேரடியான தொடர்பு இல்லை என்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தம்புள்ளாவில் நடைபெற்ற முத்தரப்பு ‘ஏ’ தொடரின் போது, இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி சூப்பர் ஓவரில் தோல்வியடைந்தது. அப்போது இலங்கை வீரர்களின் அதிகப்படியான வெற்றியைக் கொண்டாடும் முறையைக் கண்டு ஆத்திரமடைந்த வைபவ் சூர்யவன்ஷி, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் ஒரு சிறிய மோதலுக்கும் வழிவகுத்தார். இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்தே மஞ்சரேக்கர் விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், வைபவ் சூர்யவன்ஷி தரப்பில் இருந்து எந்தவிதமான நேரடிப் பதிலும் அளிக்கப்படவில்லை என்பதும், சமூக வலைதள வதந்திகளை நம்ப வேண்டாம் என்பதும் இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
