ஆர்சிபி அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி..

2024 ஐபிஎல் 15வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதியது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தோற்கடித்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு  அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய எல்எஸ்ஜியின் துவக்க வீரர் குயிண்டன் டி காக் 56 பந்துகளில் 5 சிக்ஸர், 8 பவுண்டரி உட்பட 81 ரன்களும், கே.எல் ராகுல் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து படிக்கல் 6 ரன்களும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 24 ரன்களும் எடுக்க, கடைசியில் நிகோலஸ் பூரன் அதிரடியாக 21 பந்துகளில் (5 சிக்ஸ், 1 பவுண்டரி) 40 ரன்கள் சேர்க்க 20 ஓவரில் லக்னோ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி 19.4 ஓவர்களில் 153 ரன்களுக்கு  ஆட்டமிழந்தது. பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களான விராட் கோலி 22 ரன்களிலும், ஃபாஃப் டு பிளெசிஸ் 19 ரன்களில் (ரன்அவுட்) வெளியேறினர்.

தொடர்ந்து வந்த ரஜத் படிதார் (29), கிளென் மேக்ஸ்வெல்(0), கேமரூன் கிரீன் (9) என அடுத்தடுத்து இளம் வீரர் மயங் யாதவின் வேகத்தில் வீழ்ந்தனர். அடுத்து வந்த அனுஜ் ராவத் 11 ரன்களில் வெளியேற ஆர்சிபி அணி 14.2 ஓவரில் 103 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்தது. இதையடுத்து ஆர்சிபியின் கடைசி நம்பிக்கையாக தினேஷ் கார்த்திக் மற்றும் இன்பாக்ட் பிளேயராக வந்த மஹிபால் லோம்ரோர் கைகோர்த்தனர். இதில் லோம்ரோர் அதிரடி காட்ட, தினேஷ் கார்த்திக் (4 ரன்கள்) நவீன் உல் ஹக்கின் 17வது ஓவரில் ஆட்டமிழந்தார். லோம்ரோர்  13 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்து  18வது ஓவரில் ஆட்டமிழந்தார். பின் மயங்க் தாகர் 0, முகமது சிராஜ் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பெங்களூரு அணி 19.4 ஓவர்களில் 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரீஸ் டாப்லி 3 ரன்களில் அவுட் ஆகாமல் இருந்தார். ஆர்சிபி அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வீழ்த்தியது.

லக்னோ அணியில் மயங்க் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும், நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். லக்னோ அணியில் 4 ஓவரில் 14 ரன்களே கொடுத்து 3விக்கெட் வீழ்த்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.. 2024 ஐபிஎல்லில் எஸ்எஸ்ஜியின் தொடர்ச்சியான 2வது வெற்றி இதுவாகும். அதே நேரத்தில் ஆர்சிபி அணி தொடர்ந்து  தனது சொந்த மைதானத்தில் 2வது தோல்வியை தழுவியுள்ளது.