செயற்கை கருவூட்டல் செய்யும் தம்பதியினருக்கு நிர்ணயம் செய்யப்பட்ட வயது வரம்பு மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் எனவும் அதனை மத்திய அரசு கவனத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் எனவும் தேசிய உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் வாரியத்துக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதாவது, செயற்கை கருவூட்டல் செய்ய விரும்பும் தம்பதிகளில் ஆணுக்கு 55 வயதையும், பெண்ணுக்கு 50 வயதையும் நிர்ணயம் செய்து மத்திய அரசானது உத்தரவிட்டுள்ளது. இந்த வயதை கடந்தால் செயற்கை கருவூட்டலுக்கு அனுமதி கிடையாது என கூறப்பட்டிருந்தது. இந்த வயது வரம்பு தனிப்பட்ட சுதந்திரத்தினை மறுப்பதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வி.ஜி.அருண், குழந்தைகளைப் பெற்றெடுப்பதும் தேவைப்படும்போது குடும்பத்தை விரிவுப்படுத்துவதும் அடிப்படை உரிமை ஆகும். இந்த வயது வரம்பானது தனிப்பட்ட சுதந்திரத்தை மறுப்பதாக இருக்கிறது. மேலும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு சர்வாதிகாரமாகவும், பகுத்தறிவற்றதாகவும் உள்ளது.

எனவே செயற்கை கருவூட்டல் குறித்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் தேசிய உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் வாரியம் இதனை மூன்று மாதங்களில் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல நீதிபதி வி.ஜி.அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.