போக்குவரத்து விதிகளை மீறுபவர்களே கண்டுபிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர் போக்குவரத்து காவல்துறையினர். சிசிடிவி மூலமாக கண்காணித்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இதில் ஒரு சில சமயங்களில் குளறுபடிகளும் ஏற்படுகிறது. அதாவது டூவீலரில் பயணம் செய்யும்பொழுது சீட் பெல்ட் அணியவில்லை என்பது போன்ற காரணத்தை கூறி சிலருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு அபராதம் விதிப்பில் தற்போது குளறுபடி நடந்துள்ளது.

பகதூர் சிங் பரிகார் என்பவர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். இவர்  சொகுசுகர் ஒன்றை வைத்துள்ளார். சமீபத்தில் இவருடைய செல்போனுக்கு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் அவருடைய ஆடி காருக்கு அபராதம் விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அபராத ரசீதில்இணைக்கப்பட்டிருப்பது ஒரு பைக்கின் புகைப்படம். அவருடைய காரின் புகைப்படம் இணைக்கப்படவில்லை. சீட் பெல்ட் அணியவில்லை என்ற காரணத்தை கூறி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் குழப்பம் ஏற்பட்டதை அடுத்து அவர் காவல் நிலையத்திற்கு சென்று விபரித்துள்ளார். ஆனால் தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்றதாக கூறி இதனால் விசாரிக்க முடியாது என்று காவல்துறை அதிகாரிகள் கைவிரித்ததால் அவர் அதிருப்தி அடைந்துள்ளார். இதனால் அவர் இந்த குழப்பங்களுக்கு எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார். அதன்படி ஹெல்மெட் அணிந்து கொண்டு தான் தன்னுடைய காரை அவர் ஓட்டி வருகிறார். இவர் ஹெல்மெட் அணிந்து கொண்டு காரை ஓட்டும் வீடியோ வந்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது . எனவே இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த போராட்டத்தை  சிறப்பான ஐடியா என்று கூறி வருகிறார்கள்.