நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலமாக பெரியார் பற்றி பேசி வருவது சர்ச்சையாக மாறியுள்ளது. அதோடு பிரபாகரனை சீமான் சந்திக்கவில்லை எனவும் அவருடன் இருப்பது போன்ற போட்டோவை இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் எடிட் செய்து  கொடுத்ததாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் சீமான் பெரியார் பற்றி தொடர்ந்து அவதூறாக பேசுவது குறித்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, சீமான் பேசுவது குதர்க்கமானது. அதற்கு பதில் என்ன அவர் பேசுவதை பற்றி கேள்வி கூட எழுப்ப முடியாது. சீமான் இப்படி பேசுவது சனாதன கும்பலுக்கு பாதை அமைத்துவிடும். தமிழ் மண்ணில் சனாதன கும்பலுக்கு பாதை அமைக்கும் வகையில் சீமான் செயல்படுகிறார்.

அவர் தெரிந்து செய்கிறாரா இல்லை தெரியாமல் செய்கிறாரா என்று புரியவில்லை. தந்தை பெரியாரின் தியாகம் ஒப்புதல் அற்றது. நானும் பிரபாகரனை சென்னையில் சந்தித்துள்ளேன். அவரை இருமுறை இலங்கையிலும் சந்தித்துள்ளேன். நாங்கள் தமிழக அரசியல் பற்றி நீண்ட நேரம் பேசி உள்ளோம். ஒருமுறை கூட அவர் திராவிடத்தை பற்றியோ அல்லது இந்திய அரசியல் பற்றியோ  தவறாக பேசியது கிடையாது. அவர் தமிழ் ஈழத்தை மீட்டெடுக்க இந்திய அரசின் துணை இல்லாமல் அதனை செய்ய முடியாது என்று நம்பினார். மேலும் சீமான் இப்படி பேசுவது பிரபாகரனை இழிவு படுத்துவது போல் இருக்கிறது என்று கூறினார்.