தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி காந்திநகர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகன் அம்மை போட்டதால் கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். கடந்த ஒன்பதாம் தேதி மகனுக்கு உணவு கொடுத்துவிட்டு பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த சிறுவன் தனது பாட்டியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பார்க்க வருமாறு அழைத்துள்ளார். அந்த பாட்டியும் பேரனை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

ஆனால் சிறுவன் வீட்டில் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பாட்டியும் உறவினர்களும் சிறுவனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. அடுத்த நாள் அதிகாலை பக்கத்து வீட்டு மாடியில் சிறுவன் சடலமாக கிடந்தான். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கடந்த மூன்று நாட்களாகியும் கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து தகவல் தெரியவில்லை. அந்த பகுதியில் கள்ள சந்தையில் கஞ்சா மதுபானம் விற்பனை செய்வது குறித்து சிறுவனின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக தெரிகிறது. அதனால் பழி வாங்குவதற்காக சிறுவனின் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் படுகின்றனர். இந்த நிலையில் சிறுவனின் பெற்றோர் தாத்தா ஆகிய 3 பேரும் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது