இந்தியாவையே உலுக்கி வரும் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு விவகாரம், நாடு முழுவதும் லட்சக்கணக்கான மருத்துவக் கனவோடு இருக்கும் மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வினாத்தாள் கசிவுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும், தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர வலியுறுத்தியும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்தத் பதற்றமான சூழலுக்கு மத்தியில்தான், பீகார் மாநிலத் தலைநகர் பட்னாவில் நடைபெற்ற மாணவர்களின் போராட்டம் யாரும் எதிர்பாராத ஒரு சுவாரசியமான திருப்பத்தைச் சந்தித்துள்ளது.

பொதுவாகப் போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காகக் காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும்  வாகனங்களைப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், பட்னாவில் சுட்டெரித்த கத்தரி வெயிலின் தாக்கத்தைத் தாங்க முடியாத மாணவர்கள், அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளிடம், “சார், வெயில் சும்மா கொளுத்துது… எங்க மேல கொஞ்சம் வாகனத்தை வச்சு தண்ணி அடிங்களேன்!” என்று வேடிக்கையாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவர்களின் இந்த நூதனக் கோரிக்கையைக் கேட்டு வியந்த போலீசாரும் மனிதாபிமான அடிப்படையில் தண்ணீர் பீரங்கியைத் திறந்துவிட்டுள்ளனர்.

 

காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்ததும், பயந்து ஓடுவதற்குப் பதிலாக, மாணவர்கள் அந்தத் தண்ணீரில் நனைந்தபடி சாலையிலேயே குத்தாட்டம் போடத் தொடங்கினர். பதற்றமாக இருந்த போராட்டக் களம், நொடிப் பொழுதில் ஒரு ஹோலிப் பண்டிகை கொண்டாட்டத்தைப் போல மாறியது. இந்த சுவாரசியமான காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, தற்போதைய Gen Z தலைமுறை மாணவர்களின் சமயோசித நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் விதமாக இணையத்தில் பயங்கரமாக டிரெண்டாகி வருகிறது.

மாணவர்களின் இந்தத் தொடர் போராட்டங்களுக்கும் குமுறல்களுக்கும் மத்தியில், மத்திய அரசு இந்த விவகாரத்தில் அதிரடிப் பாய்ச்சலைக் காட்டியுள்ளது. வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு, நாட்டின் இளைய தலைமுறையின் எதிர்காலத்தோடு விளையாடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தேர்வு முறைகேடு வழக்குகளை அதிவிரைவாக விசாரித்து, குற்றவாளிகளுக்கு உடனுக்குடன் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காகத் தனி ‘ஃபாஸ்ட் டிராக்’  நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் உறுதியளித்துள்ளார். இதன் மூலம் மாணவர்களின் நலன் காக்கப்படும் என்றும், முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் எவரும் தப்ப முடியாது என்றும் அரசு தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.