அதிமுக கட்சியின் முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ். இவர் அதிமுக பிளவு பட்டபோது ஓபிஎஸ் அணியில் இருந்த நிலையில் பின்னர் திமுகவில் இணைந்தார். இவருக்கு சமீபத்தில் திமுக கட்சியின் செய்தி தொடர்பு துணைச் செயலாளராக பதவி வழங்கியது. இவர் நேற்று திடீரென மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது முதல்வர் ஸ்டாலினும் தனி எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், கோவை செல்வராஜ் திடீரென மரணமடைந்த செய்தியை கேட்டு நான் பேரதிர்ச்சிக்கு உள்ளானேன்.
அவருடைய மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் திமுக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு கழகத்தின் கொள்கைகளை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். அவரின் மகனின் திருமணம் நடந்து கொண்டிருக்கும்போது அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவருடைய மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.