செங்கல்பட்டு ரயில் நிலையம் வழியாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும் அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சார ரயில்களும் சென்று வருகிறது. இந்த ரயில்களில் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர். இந்நிலையில் ரயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணியை செய்வதற்காக அம்ரித் பாரத் திட்டத்தில் 22.14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி அந்த பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். ஒப்பந்ததாரருக்கு ரயில்வே நிர்வாகத்தினர் 150 நாட்களுக்குள் அந்த பணியை முடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. அதற்கு ஒப்பந்ததாரர்கள் ரயில் நிலைய வளாகத்தில் முழுமையாக பணிகளை செய்ய வேண்டி இருப்பதால் பயணிகளுக்கு மாற்று பாதை அமைத்து தர வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திடம் கூறியுள்ளனர்.

அதன்படி இரண்டாவது நடைமேடை கடைசி பகுதியிலிருந்து மின்வாரியம் வழியாக பேருந்து நிலையத்திற்கு பயணிகள் சென்று வர வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. அந்த வழியாக பயணிகள் சென்று வருகின்றனர். ஆனால் ரயில் நிலைய வளாகத்தில் அலுவலக கட்டிட பணி வளாக சீரமைப்பு பணிகள் தொடங்கி மெதுவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.