அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது “அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும். அவர் கூட்டணி தர்மத்தையே மீறி பேசி வருகிறார். மாநில தலைமைக்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை. பாஜகவில் மாநில தலைமை பொறுப்பை வகித்தவர்கள் இதுபோன்று பேசியதில்லை.

அண்ணாமலையின் செயல்பாடு அதிமுக-பாஜக கூட்டணி தொடரக் கூடாது என்பது போல உள்ளது. மறைந்த தலைவர் ஜெயலலிதா பற்றி விமர்சனம் செய்துள்ள அண்ணாமலையை நான் வன்மையாக கண்டிக்கிறேன்” என்று கூறினார்.

அதோடு அதிமுகவை விமர்சிக்கும் போக்கை அண்ணாமலை தொடர்ந்து கடைப்பிடித்தால், கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்ய நேரிடும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் அண்ணாமலை எதைப் பேசினாலும் பொறுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. கூட இருந்தே குழிபறிக்கும் செயல்களை அதிமுக வேடிக்கை பார்க்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.