விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அதிமுக வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்த ஆலோசனை கூட்டம் எழுச்சிமிக்க கூட்டமாக நடந்து முடிந்துள்ளது. வருகிற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து பணிகளையும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். அதன்பிறகு நான் விஜயுடன் கூட்டணி வைப்பதா இல்லையா என்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவு செய்ய வேண்டும். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வியூகங்களையும் எடப்பாடி பழனிச்சாமி வகுத்து வருகிறார் என்றார்.

இதைத்தொடர்ந்து திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். இது குறித்து அவர் கூறும் போது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அமைச்சர்கள் தங்களுடைய குடும்பத்தை வளப்படுத்தி வருகிறார்கள். அவர்கள் தங்களுடைய உற்றார் உறவினர்களுக்கு பதவிகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். தலைமை முதல் தொண்டர்கள் வரை குடும்ப ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அண்ணா காலம் முதல் எத்தனையோ தியாகங்கள் திமுகவில் இருக்கும் நிலையில் தற்போது வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது திமுகவினர் மத்தியில் கொதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது கண்டிப்பாக அதிமுகவிற்கு சாதகமாக அமைவதோடு வரும் தேர்தலில் நிச்சயம் வெளிப்படும். மேலும் குடும்ப ஆட்சி என்றால் திமுக. கொள்கை ஆட்சி என்றால் அது அதிமுக என்று கூறினார்.