கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் இறந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் உட்பட மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்..

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பிலிப்பட்டி என்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 13 மாணவ, மாணவிகளை மாநில அளவிலான கால்பந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று  மதியம் பள்ளியில் இருந்து அந்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மற்றும் மற்றொரு ஆசிரியர் திலகவதி ஆகிய இருவரும் அழைத்துச் சென்றுள்ளனர். இந்த போட்டி தொட்டியத்தில் உள்ள தனியார் காலூரியில் இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்த போட்டிக்காகதான் நேற்று மதியம் ஒப்புதலோடு 13 மாணவ, மாணவிகளை அழைத்துச் சென்றுள்ளனர்..

இந்நிலையில்  இன்று காலையில் கரூர் மாயனூர் காவிரி கதவணையை சுற்றிப்பார்க்க பார்க்க சென்றபோது 4 மாணவிகள் இறந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் பிலிப்பட்டி  கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. கிராம மக்கள் திரண்டு கண்ணீர் மல்க  ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதாவது இந்த கிராமத்தைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவி சோபியா, 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தமிழரசி, 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவி இனியா மற்றும் லாவண்யா ஆகிய 4 பேரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.. ஒரு மாணவி தண்ணீரில் இறங்கும் போது, அந்த மாணவியை காப்பாற்ற சென்ற போது மற்ற 3 மாணவிகளும் இறந்துள்ளனர்.. கல்வித்துறையை பொறுத்தவரை  மாநில அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதி அளித்துள்ளனர்.. ஆனால் அதனை கடந்து  மாயனுர் அணையை சுற்றி பார்ப்பதற்கு மாவட்ட நிர்வாகம், கல்வி சார்ந்த துறை சார்பில் அனுமதி கொடுக்கப்படவில்லை.

மாணவிகளின் பெற்றோர்கள் உட்பட ஒட்டுமொத்த கிராம மக்களும்   குழந்தைகளை பறிகொடுத்து கண்ணீரில் தவிக்கின்றனர். அவர்கள் கவனக்குறைவால் தான் இந்த சம்பவம் நடந்ததாக தங்களது ஆதங்கத்தை ஆசிரியர்களிடம்  வெளிப்படுத்தி வந்தனர். மேலும் மாணவிகளின் பெற்றோர்கள் கண்ணீருடன் தரையில் உட்கார்ந்து அழும் காட்சி நெஞ்சை துளைக்கிறது. பின் அவர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து இலுப்பூர் டிஎஸ்பி காயத்ரி, இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி, வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது. கிராமத்தில் போலீசாரும் குவிக்கப்பட்டனர். கிராமமும் ஒட்டுமொத்தமாக வேதனையில் தவிக்கிறது..

இந்நிலையில் கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் இறந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் உட்பட மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி விராலிமலை அருகே பிலிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொட்டுமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் இடைநிலை ஆசிரியர் செபசகாயூ இப்ராஹிம், பட்டதாரி ஆசிரியர் திலகவதி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தல 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கும் உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..