சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி ரோடு வாணியர் காலணியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலக்ஷ்மி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் 2-வது மகள் நளினி வீட்டை விட்டு வெளியே சென்று காதல் திருமணம் செய்து கொண்டார். மேலும் கடைசி மகளான பிரியங்கா சேலத்தில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரியங்கா தனது தந்தையிடம் அக்காள் வீட்டிற்கு செல்ல அனுமதி கேட்டுள்ளார். அதற்கு அக்காள் வீட்டுக்கு செல்ல கூடாது என பாஸ்கரன் தடை விதித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதி காப்பாளர் பாஸ்கரனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பிரியங்கா வெளியே செல்ல அனுமதி கேட்பதாக கூறியுள்ளார்.

அப்போது பிரியங்காவை வெளியே அனுப்ப வேண்டாம் என பாஸ்கரன் தெரிவித்துள்ளார். இதனால் தந்தையிடம் பேசாமல் இருந்த பிரியங்கா விடுமுறை தினத்தில் வீட்டிற்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று பிரியங்காவின் உடலை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.