மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில், காதலன் ஒருவரின் காரை அவரது காதலி சுமார் 3,400 லிப்ஸ்டிக் முத்தங்களால் மூடிய விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. தன் காதலன் மீது கொண்ட அன்பை வித்தியாசமாக வெளிப்படுத்த நினைத்த அந்தப் பெண், காதலனின் வெள்ளை நிறக் காரின் அனைத்துப் பகுதிகளிலும் தனது உதட்டுச் சாயத்தால் முத்தமிட்டு, கார் முழுவதையும் சிவப்பு முத்தத் தடங்களால் நிரப்பியுள்ளார்.

இந்த விசித்திரமான காட்சியை அந்த இளைஞர் வீடியோவாகப் பதிவு செய்து ‘ரீல்ஸ்’ ஆகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் பரவி, லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது. ஆனால், இந்த வைரல் வீடியோ நெட்டிசன்களை மட்டுமல்லாமல், குவாலியர் போக்குவரத்து காவல்துறையினரின் கவனத்தையும் ஈர்த்ததுதான் அங்கு நடந்த பெரிய திருப்பம்.

காரின் நிறத்தையும் தோற்றத்தையும் விதிகளுக்கு மாறாக மாற்றியமைத்தது, பொதுச் சாலையில் கவனத்தை திசை திருப்பும் வகையில் வாகனத்தை இயக்கியது மற்றும் போக்குவரத்து விதிகளை மீறியது போன்ற காரணங்களுக்காக, போக்குவரத்து போலீசார் அந்த இளைஞரைக் கண்டறிந்து அவருக்கு அதிரடியாக ஃபைன் விதித்துள்ளனர்.

இந்நிலையில் காதலியின் 3,400 முத்தங்களால் மகிழ்ச்சியில் மிதந்த காதலனுக்கு, காவல்துறையின் இந்த அபராதச் செல்லான் பெரும் அதிர்ச்சியையும், அதேவேளையில் இணையவாசிகளுக்கு மிகப்பெரிய சிரிப்பலையையும் ஏற்படுத்தியுள்ளது.

“>