கும்பகோணத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் சாமி தரிசனம் செய்த பின்னர், நடிகை கஸ்தூரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பல்வேறு  அரசியல் நிலவரங்கள் குறித்துப் பல அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். சட்டமன்றத்திலும் பொதுவெளிகளிலும் அரசியல்வாதிகள் தங்களின் பேச்சுவழக்கில் நாகரிகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நடிகை கஸ்தூரி வலியுறுத்தினார். அரசியல் காரணங்களுக்காகப் பெண்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் தரக்குறைவாகப் பேசுவது தற்போது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்றும், அரசியல் லாபத்திற்காக ஒருவரை இழிவுபடுத்த நினைத்து ஒட்டுமொத்தப் பெண்களின் சுதந்திரத்தையும் முடக்க முயல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கடுமையாகக் கூறினார்.

த.வெ.க. அரசு பதவியேற்று 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில், மக்கள் மிகுந்த பொறுமையுடன் காத்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், மாநிலத்தில் அதிகரித்து வரும் பாலியல் பிரச்சினைகள் மற்றும் போதை கலாசாரத்திற்கு முந்தைய ஆட்சியை மட்டுமே காரணம்காட்டி காலம் தாழ்த்தாமல் அரசு உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும், பரந்தூர் திட்டம் கைவிடப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருப்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு என்று குறிப்பிட்ட கஸ்தூரி, திமுக அரசு கொண்டுவந்தது ஒரே காரணத்துக்காக தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய முக்கியமான வளர்ச்சித் திட்டப் பணிகளைத் த.வெ.க. அரசு கைவிடுவது தவறு என்றார். சேலம் விவசாயிகளுக்கு நீதி கிடைத்தது போல, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் பரந்தூரிலும் என்ன செய்ய முடியும் என்பது குறித்து முதல்-அமைச்சர் விஜய் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

த.வெ.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி நல்ல முறையில் இருக்கும்போதே, மேகதாது அணை விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காண உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், த.வெ.க.வுடன் காங்கிரஸ் கட்சிக்கு மோதல் போக்கு ஏற்பட்டுவிட்டதோ என்ற சந்தேகம் எழுவதாகவும், “இன்றைய முதல்-அமைச்சர் நாளைய பிரதமர்” என்ற த.வெ.க.வினரின் கருத்துவிற்கும், சமீபத்திய பேறுகால விடுப்பு அறிவிப்பிற்கும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதைச் சுட்டிக்காட்டினார். இடைத்தேர்தலில் த.வெ.க. தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றால், தற்போதைய காங்கிரஸ் அமைச்சர்களின் இடங்கள் ஆட்டம் காணுமோ என்ற சந்தேகமும் எழுவதாக அவர் தெரிவித்துள்ளார்.