நமது உடலின் மிக முக்கியமான மற்றும் மிகப்பெரிய உட்புற உறுப்புகளில் ஒன்று கல்லீரல் ஆகும். செரிமானத்தை சீராக்குவது முதல் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவது வரை பல நூற்றுக்கணக்கான பணிகளை கல்லீரல் செய்கிறது. இருப்பினும், கல்லீரலின் சிறப்பு என்னவென்றால், அது 70% முதல் 80% வரை பாதிக்கப்பட்ட பின்னரே வெளிப்புற அறிகுறிகளைக் காட்டத் தொடங்கும். இதனால், பலருக்கும் கல்லீரல் நோய் முற்றிய பிறகே தங்களுக்குப் பாதிப்பு இருப்பது தெரியவருகிறது.

எனவே, கல்லீரல் முற்றிலும் பழுதடையும் வரை காத்திருக்காமல், அவ்வப்போது சில எளிய மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். அதில் முதலாவதாக ‘லிவர் ஃபங்க்ஷன் டெஸ்ட்’  எனப்படும் கல்லீரல் செயல்பாட்டுப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். இந்த இரத்தப் பரிசோதனையின் மூலம் கல்லீரலில் உள்ள என்சைம்கள்  மற்றும் புரதங்களின் அளவைக் கண்டறிந்து, கல்லீரலில் வீக்கம் அல்லது அழற்சி உள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இரண்டாவதாக, ‘செரம் பிலிரூபின்’  பரிசோதனை மூலம் பித்தநீரின் அளவைக் கணக்கிட்டு, மஞ்சள் காமாலை அல்லது பித்தப்பைக் கோளாறுகள் உள்ளதா என்பதைக் கண்டறியலாம். மூன்றாவதாக, ‘அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்’  செய்வதன் மூலம் கல்லீரலின் அளவு, வடிவம் மற்றும் அதில் கொழுப்பு படிந்திருக்கிறதா  என்பதைத் தெளிவாகப் தெரிந்துகொள்ள முடியும்.

நான்காவதாக, ‘ஃபைப்ரோஸ்கேன்’  அல்லது சிடி ஸ்கேன்  போன்ற மேம்பட்ட பரிசோதனைகள் மூலம் கல்லீரலில் தழும்பு திசுக்கள்  உருவாகி உள்ளதா என்பதைத் துல்லியமாகக் கண்டறியலாம். ஐந்தாவதாக, தேவைப்படும் பட்சத்தில் மருத்துவரின் ஆலோசனையோடு செய்யப்படும் ‘பயாப்ஸி’  பரிசோதனை கல்லீரல் பாதிப்பின் தீவிரத்தைப் புரிந்துகொள்ள உதவும். இந்த 5 பரிசோதனைகள் மூலம் கல்லீரல் நோய்களைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை பெற்று ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.