வேலூர் மாவட்டத்தில் காட்பாடி அருகே வள்ளிமலை திருமண மண்டபம் உள்ளது. இங்கு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்ற நிலையில் இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கடந்த தேர்தலில் உங்களிடம் கூறினேன். எனக்கு வாக்களித்தால் இந்த முறை 4 திட்டங்கள் வரும் என்று. நான் சொன்னபடி பொன்னையில் 48 கோடி செலவில் ஒரு பாலம் கட்டி கொடுத்தேன். பின்னர் ஒரு கல்லூரி கட்டி கொடுத்துள்ளேன். இதேபோன்று சேர்க்காடு கூட்ரோடு பகுதியில் 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வரை இருக்கும் நிலையில் இதே போன்று பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காக சிப்காட் அமைக்கப்பட உள்ளது. இதேபோன்று பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட இருக்கும் நிலையில் மகளிர் உரிமை சபையும் கிடைக்காதவர்களுக்கு விரைவில் கிடைக்கும் என்றார்.

அதன்பிறகு என்னிடம் எல்லோரும் கேட்கிறார்கள். எப்படி ஒரே தொகுதியில் இத்தனை வருஷமாக வெற்றி பெறுகிறீர்கள் என்று, நான் இதை தொகுதியாக நினைக்கவில்லை. கோவிலாக நினைக்கிறேன். ‌ ஓட்டு போடும் மக்களை தெய்வமாக நினைக்கிறேன். எனக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற செய்த நீங்கள் தான் என்னுடைய தெய்வம். கலைஞர் கருணாநிதி சட்டமன்றத்தில் 56 வருடங்கள் இருந்த நிலையில் அவருக்கு பிறகு நான் தான் 53 வருடங்களாக சட்டமன்றத்தில் இருக்கிறேன். என்னுடைய கட்டை கீழே விழும்வரை நான் காட்பாடி தொகுதி மக்களுக்காக பாடுபடுவேன். மேலும் மற்ற தொகுதிகளை ஒப்பிட்டுப் பாருங்கள். அந்த தொகுதிகளை விட நான் தான் அதிக அளவில் திட்டங்களை கொண்டு வந்துள்ளேன் என்று உருக்கமாக பேசினார்.