சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை அருகே காக்காபாளையத்தில் வாசுதேவன் – கீதாராணி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு விக்னேஸ்வரி என்ற மகளும், குணசீலன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் – மனைவி இடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக வாசுதேவன் கடந்த 9 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளியான இவர் கடந்த இரண்டு மாதங்களாக நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே மாணிக்கம் பாளையத்தில் உள்ள தனது உறவினரான ஆறுமுகம் என்பவரது தோட்டத்தில் உள்ள ஸ்டோர் ரூமில் தங்கி காம்பவுண்ட் சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

கடந்த சில நாட்களாகவே மன வேதனையில் இருந்து வந்த வாசுதேவன் கடந்த 24-ஆம் தேதி வெகு நேரமாகியும் வேலைக்கு வராததால் அவருடன் வேலை பார்த்த  மணிகண்டன் என்பவர் அவர் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வாசுதேவன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.