திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி ஊராட்சி பொன்னிரை கிராமத்தில் 1,200க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக பொன்னிரையில் ரேஷன் கடை அமைந்துள்ளது. இந்த ரேஷன் கடையில் வாரத்தில் மூன்று நாட்கள் பொன்னிரையிலும், இரண்டு நாட்கள் ஆலத்தம்பாடியிலும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சமீபத்தில் அந்த ரேஷன் கடை முறையாக திறக்கப்படவில்லை எனவும் சில ஒரு நாளைக்கு சில மணி நேரங்கள் மட்டுமே திறந்து இருப்பதாகவும் அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் முன்னதாக பணியாற்றிய ஊழியர் ஒருவர் இந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களிடம் கைரேகை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ரேஷன் பொருட்களை முறையாக வழங்கவில்லை என்ற குற்றம் சாட்டும் முன் வைக்கப்பட்டது. இதனையடுத்து முன்பு பணியாற்றிய ஊழியர் கைரேகை பெற்றுக்கொண்டு ரேஷன் பொருள் வழங்கவில்லை எனக் கூறி பொன்னிரை கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிராம வார்டு உறுப்பினர் தமிழரசி பால்ராஜ் தலைமையில் ரேஷன் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது “எங்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் பொருட்களை உடனடியாக வழங்க வேண்டும்” என அவர்கள் கோஷங்கள் எழுப்பி உள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் எம்எல்ஏ போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அவர்களிடம் பொதுமக்கள் தங்களுக்கு முறையாக ரேஷன் பொருள் வழங்கவில்லை எனக் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து எம்எல்ஏ திருவாரூர் மாவட்ட வழங்கல்  அலுவலர் கீதாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, பொது மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். அதனை தொடர்ந்து  அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.