தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில், போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த 35 வயது நபர், தன்னை போலீசில் காட்டிக்கொடுத்த சிறுமி மற்றும் அவளது குடும்பத்தினர் உட்பட ஒரே இரவில் 6 பேரை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜு குமார் என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபர், தன் மீது பாலியல் புகார் அளித்த மைனர் சிறுமி, அவளது தாய் மற்றும் பாட்டி ஆகிய மூவரையும் அவர்களது இல்லத்தில் வைத்துத் துடிதுடிக்கக் கொலை செய்துள்ளார்.

இத்துடன் நிறுத்தாமல், ஆத்திரம் அடங்காத அந்த நபர், நேராகத் தனது வீட்டிற்குச் சென்று தனது சொந்த மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் படுகொலை செய்துள்ளார். இந்த இரட்டைக் குடும்பப் படுகொலையை முடித்த பின்னர், தனது உறவினர்களுக்கு போன் செய்து, “இரண்டு குடும்பங்களையும் முடித்துவிட்டேன், நானும் சாகப் போகிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இந்தக் கொடூரக் கொலைச் சம்பவம் காட்டுத்தீயாய் பரவியதை அடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள காவல் நிலையத்தை முற்றுகையிட்டு நள்ளிரவில் உடல்களை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். “தன் மீது போக்சோ வழக்கு பாய்ந்த சில நாட்களிலேயே லஞ்சம் கொடுத்து ஜாமீனில் வந்த அந்த நபர், ஓரிரு வாரங்களில் உங்கள் குடும்பத்தையே காலி செய்வேன் என்று மிரட்டினான்.இதுகுறித்து போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் அலட்சியமாக இருந்துவிட்டனர் என்று சிறுமியின் மாமா நரேஷ் செய்தியாளர்களிடம் கதறியுள்ளார்.

மேலும், தங்களின் குடும்பத்தில் உள்ள மாற்றுத்திறனாளி சிறுமிக்கு உடனடி போலீஸ் பாதுகாப்பு தேவை என்றும், குற்றவாளியைக் கைது செய்து தங்களை வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உறவினர்கள் ஆக்ரோஷமாக வலியுறுத்தியுள்ளனர். தற்போது 6 பேரின் சடலங்களும் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள கொலையாளி ராஜு குமாரைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.