திரிபுரா மாநிலத்தின் கைலாஷஹர் அருகே, அடர்ந்த பசுமையான மலைப்பகுதியில் அமைந்துள்ளது உனகோடி. பிரம்மாண்ட பாறைகளில் செதுக்கப்பட்ட சிவன், விநாயகர் உள்ளிட்ட ஏராளமான தெய்வச் சிற்பங்கள் இந்தப் பகுதியின் முக்கிய அடையாளமாக உள்ளன. உனகோடி என்ற பெயருக்கு ‘ஒரு கோடிக்கு ஒன்று குறைவு’ என்பது பொருள். இந்தப் பெயருக்குப் பின்னால் சுவாரசியமான புராணக் கதை ஒன்றும் சொல்லப்படுகிறது.
ஐதீகத்தின்படி, சிவபெருமான் ஒரு கோடி தெய்வங்களுடன் காசிக்குச் சென்றபோது, இந்தப் பகுதியில் ஒரு இரவு தங்கியதாகக் கூறப்படுகிறது. அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பாக அனைவரும் எழுந்து காசிக்குப் புறப்பட வேண்டும் என்று சிவபெருமான் அறிவுறுத்தியதாகவும், ஆனால் சிவபெருமானைத் தவிர மற்றவர்கள் யாரும் எழுந்திருக்கவில்லை என்றும் புராணக் கதை கூறுகிறது. இதனால் கோபமடைந்த சிவபெருமான், அவர்களை கற்சிலைகளாக மாறும்படி சபித்ததாக நம்பப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த இடம் ‘உனகோடி’ என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், 99 லட்சத்து 99 ஆயிரத்து 999 சிலைகள் உண்மையில் ஒரே இரவில் உருவாக்கப்பட்டன என்பதற்கு வரலாற்று அல்லது தொல்லியல் ஆதாரம் இல்லை. உனகோடியில் காணப்படும் சிற்பங்கள் 7 முதல் 9-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை என தொல்லியல் மற்றும் அரசு சுற்றுலா ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இவை பாறைகளில் செதுக்கப்பட்ட உருவங்கள் மற்றும் தனித்தனி கற்சிலைகள் என இரு வகைகளாகக் காணப்படுகின்றன.
இங்குள்ள மிகப் பிரம்மாண்டமான சிற்பங்களில் ‘உனகோடீஸ்வர கால பைரவர்’ என அழைக்கப்படும் சிவனின் பாறை உருவம் முக்கியமானது. தலைப்பகுதியைச் சேர்த்து சுமார் 30 அடி உயரம் கொண்ட இந்தச் சிற்பத்துடன், மிகப்பெரிய விநாயகர் உருவங்களும் துர்கை உள்ளிட்ட தெய்வச் சிற்பங்களும் காணப்படுகின்றன. புராணக் கதையும், பல நூற்றாண்டுகள் பழமையான பாறைச் சிற்பங்களும் இணைந்து உனகோடியை திரிபுராவின் முக்கிய வரலாற்று மற்றும் ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக மாற்றியுள்ளன.
