கடலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஷ்ணு பிரசாத். இவர் இன்று வடலூரில் நடைபெற்ற கிராம கமிட்டி காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்தார். இந்த கூட்டம் ஒரு விடுதியில் நடைபெற்ற நிலையில் அந்த விடுதியின் லிப்டில் விஷ்ணு பிரசாத் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஏறினர். அது சென்று கொண்டிருந்த போது திடீரென பாதியில் நின்றது. உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள் அவசரகால சாவியை பயன்படுத்தி லிப்டை திறக்க முயற்சி செய்த நிலையில் அது பலனளிக்கவில்லை.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு லிப்டை உடைத்து விஷ்ணு பிரசாத் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை பத்திரமாக மீட்டனர். மேலும் அவர்களுக்கு முதலுதவி கொடுக்கப்பட்ட நிலையில் பின்னர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.