மாநிலத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதில், ராய்கட் மாவட்டத்தில் உள்ள படல்கங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, எம்.ஐ.டி.சி மற்றும் சாவனே பகுதிகளில் இருந்த எரிவாயு கிடங்குகளில் இருந்து சுமார் 3,000 சிலிண்டர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

இதில் காலியான மற்றும் எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் என அனைத்தும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சிலிண்டர்கள் வெள்ள நீரில் அடித்து வரப்பட்டு நீர்நிலைகளின் பல்வேறு பகுதிகளில் கரை ஒதுங்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சிலிண்டர்களைக் கண்டால் அவற்றைத் தொடவோ, பயன்படுத்தவோ அல்லது சொந்தமாக நகர்த்தவோ முயற்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த உருளைகளைக் கண்டால் உடனடியாக HPCL நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், தற்போது நிர்வாகம் அவற்றை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.