இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளம் மூலம் நட்பாக பழகி பிறகு காதலாக மாறி திருமணம் செய்து கொள்பவர்கள் ஏராளம். அதே சமயம் சமூக வலைத்தளத்தில் ஒருவர் பழக்கம் ஏற்பட்டால் அவரை சந்திக்க சென்று சிக்கலில் சிக்குபவர்களும் பலர் உள்ளனர். இந்த நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த கஜேந்திரா என்ற 18 வயது நபர், இளம்பெண் ஒருவரை சமூக வலைத்தளம் மூலமாக காதலித்தார்.

அந்தப் பெண்ணை சந்திக்க விரும்பியதால் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்குவங்க மாநிலம் மிட்னாபூரில் உள்ள தனது காதலியை பார்க்க கால் டாக்ஸி எடுத்து சென்றுள்ளார். இதனை அறிந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் கஜேந்திராவை அடித்து கொலை செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.