உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியவுடன் அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அதிலும் குறிப்பாக நிறுவனத்தின் செலவினங்களை குறைப்பதற்காக அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்ந்து விமர்சனங்களுக்கு ஆளாகி வருகின்றன. எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியவுடன் அதில் ஏராளமான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளார். மேலும் சான் பிரான்சிஸ்கோவில் ட்விட்டர் தலைமையகத்தில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளில் மேற்கொண்டு வருகிறார். இதனால் ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் துப்புரவு பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டபோது எலான் மறுத்து விட்டதனால் துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை  தொடர்ந்து அவர்கள் வேலையை விட்டு நீக்கும் உத்தரவை எலான் மஸ்க் எடுத்துள்ளார். இது நிறுவன பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ட்விட்டரில் சிக்கன நடவடிக்கை எதிரொலியாக நிறுவனப் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்லும்போது தங்களுடன் கழிவறைக்கு செல்வதற்கு தேவையான டிஷ்யூ பேப்பரையும் கொண்டு செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் நான்கு தளங்களை மூடும் படியும், மீதமுள்ள இரண்டு தளங்களில் ஊழியர்கள் பணி புரியும் படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள அலுவலகத்திற்கான வாடகையை செலுத்த  நிறுவனம் செலுத்த தவறவிட்டது எனவும் தி நியூ இயர் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி கூறியுள்ளது. இது குறித்து எலான் மஸ்க் கூறியதாவது, 300 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான பட்ஜெட் பற்றாக்குறையை தவிர்ப்பதற்காக இந்த சிக்கன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என கூறியுள்ளார். மேலும் ட்விட்டரின் கலிபோர்னியா, சாக்கிரமெண்டா நகர தகவல் மையங்களும் மூடப்பட்டுள்ளது. இது ட்விட்டரின் செயல்பாட்டை பாதிக்கும் என பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களிடம் சிக்கன நடவடிக்கை மிக அவசியம் என பதிலாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.