மத்தியப்பிரதேசத்தின் புகழ்பெற்ற புண்ணியத் தலமான உஜ்ஜைனியில், சுடுகாட்டில் எரியும் பிணத்திலிருந்து மனித மாம்சத்தை ஒருவர் கையில் வாளுடன் எடுத்து உண்ணும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆன்மீகத்துக்கும் சடங்குகளுக்கும் பெயர்போன அந்த புனித மண்ணில், திருநங்கை அகோரி ஒருவர் சுடுகாட்டுச் சாம்பல் மற்றும் எரியும் ஈமக்கிரியைகளுக்கு நடுவே இத்தகைய கொடூரமான செயலில் ஈடுபட்ட காட்சி இணையத்தில் வெளியாகி, ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.
இந்தக் கொடூரமானச் சம்பவம் குறித்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, உஜ்ஜைனியைச் சேர்ந்த ஆன்மீகத் தலைவர்களும் சாதுக்களும் கடும் கொதிப்படைந்துள்ளனர். புனித நகரமான உஜ்ஜைனியின் கண்ணியத்திற்கும் ஆன்மீக மரபிற்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இத்தகைய அசிங்கமான செயல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக சாதுக்கள் சங்கம் தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
மேலும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும், பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கும் வகையிலும் செயல்பட்ட அந்த நபர் மீது காவல்துறை உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள உள்ளூர் காவல்துறையினர், வீடியோவின் உண்மைத்தன்மை மற்றும் அதில் இடம்பெற்றுள்ள திருநங்கை அகோரி யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்மீகத்தின் பெயரால் சுடுகாடுகளில் அரங்கேறும் இத்தகைய அதிர்ச்சிகரமான மற்றும் மனிதநேயமற்ற சம்பவங்கள், சமூகத்தில் பெரும் விவாதத்தையும் அச்சத்தையும் கிளப்பியுள்ளன.
இந்நிலையில் புண்ணிய நகரத்தின் அமைதியையும் ஆன்மீகச் சூழலையும் சீர்குலைக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களிடையே வலுத்து வருகிறது.
