பெங்களூரு வர்தூர் அருகே உள்ள குஞ்சூர் பால்யா CDP சாலையில், வேகமாக வந்த தண்ணீர் டேங்கர் லாரி ஒன்று முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மிகக் கொடூரமாக மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த கோர சம்பவம் ஷோபா நியோபோலிஸ் பகுதியில் இருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில் நடந்துள்ளது. லாரி மோதிய வேகத்தில் கீழே விழுந்த பைக் ஓட்டி வந்தவர், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் சக்கரத்தின் அடியில் சிக்கி படுகாயமடைந்தார்.

​இந்த நெஞ்சை பதறவைக்கும் காட்சியைக் கண்டு அலறியடித்தபடி ஓடிவந்த பொதுமக்களும் சக வாகன ஓட்டிகளும், இரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்கப் போராடினர். அப்போது விபத்தை ஏற்படுத்திய அந்த லாரியில் நம்பர் பிளேட் கூட இல்லை என்பதைக் கண்டு மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோட முயன்ற லாரி டிரைவரை, ஆத்திரமடைந்த பொதுமக்கள் விடாமல் துரத்திச் சென்று நடுரோட்டில் மடக்கிப் பிடித்தனர்.

​பிடிபட்ட டிரைவரிடம் “என்னய்யா பார்த்து ஓட்ட மாட்டியா?” என்று பொதுமக்கள் கொதித்தெழுந்து கெடுபிடியாக விசாரணை நடத்தியபோது, அவர் “நான் வண்டி ஓட்டக் கத்துக்கிட்டே வெறும் 5 நாள் தான் ஆகுது, என்கிட்ட லைசென்ஸ் இல்ல!” என்று அலட்சியமாகப் பதிலளித்துள்ளார். அனுபவமும் லைசென்ஸும் இல்லாத நபர்கள் கனரக வாகனங்களை இயக்குவது குறித்து மக்கள் கொதித்தெழுந்துள்ள நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.