தமிழக சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதன்முதலாக அமைச்சர் உதயநிதி பதில் அளித்தார். அமைச்சர் உதயநிதியிடம் திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் திருப்பூரில் அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் உதயநிதி திருப்பூரில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் கால்பந்து, தடகள ஓடுபாதை, உடற்பயிற்சி கூடம் போன்றவைகளுடன் கூடிய நவீன விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி 60 சதவீதம் நிறைவடைந்து விட்டது. சுமார் 18 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் விளையாட்டு மைதானத்தின் பணிகள் ஏப்ரல் மாதத்தில் இறுதிக்குள் முடிவடையும் என்றார்.
அதோடு நேரில் வந்து விளையாட்டு மைதானத்தை தானே திறந்து வைப்பதாகவும் கூறினார். அதன் பிறகு தமிழக அரசு உலகமே வியக்கும் வகையில் கபடி மற்றும் சிலம்பம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை உள்ளடக்கிய முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டிகள் ஜூன் மாதத்தில் இறுதிக்குள் முடிக்கப்படும் என்றார். மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை போன்று உலகக்கோப்பை கபடி போட்டியை சென்னையில் நடத்துவது தொடர்பாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி கொடுத்தார்