பீகாரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் குருகிராமில் உள்ள செக்டர் 55-56 மெட்ரோ ரயில் நிலையம் அருகே தனது வாடிக்கையாளருக்காகக் காத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த காவல் துறை அதிகாரி ஒருவர், திடீரென ஆட்டோவுக்குள் வந்து அமர்ந்து உடனடியாக வண்டியை எடுக்குமாறு கூறியுள்ளார்.

​தான் ஏற்கனவே ஒரு சவாரிக்காகக் காத்திருப்பதாக அந்த இளைஞர் கூறியதும், ஆட்டோவை விட்டு கீழே இறங்கிய அந்த அதிகாரி, ஆட்டோவை முன்பக்கத்திலிருந்து புகைப்படம் எடுக்கத் தொடங்கியுள்ளார். ஏற்கனவே ஒருமுறை இதே அதிகாரியை இலவசமாக அழைத்துச் சென்று பணம் ஏதும் பெறாமல் விட்டதாகவும், இந்த முறையும் அவர் இலவச சவாரி கேட்டு மிரட்டுவதாகவும் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

​ஆட்டோவை போட்டோ எடுத்த அதிகாரி, டிரைவரிடம் வந்து ‘ரம்தேவ் பிரசாத் தான நீ?’ எனப் பெயரையும் உறுதி செய்துகொண்டு சலான் போடுவதாக மிரட்டியுள்ளார். இதற்கு அந்த இளைஞர், “இலவசமாக அழைத்துச் சென்றால் பரவாயில்லை, இல்லையென்றால் இப்படித்தான் பழிவாங்குவீர்களா?” என மனவேதனையுடன் கேமராவைப் பார்த்துப் பேசும் வீடியோ தற்போது ‘ஆர்டி राइडर’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

​இந்த வீடியோவைக் கண்டு கொந்தளித்த நெட்டிசன்கள், ஹரியானா காவல் துறைக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உடனடியாகச் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் நீதிமன்றத்தை அணுகி நீதி பெற வேண்டும் என்றும் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.