மத்தியப் பிரதேச மாநிலம் அசோக்நகர் மாவட்டத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க ராணி அவந்திபாய் லோதியின் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் குதித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் செல்போன் கோபுரத்தில் ஏறி விசித்திரமான போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அசோக்நகர் மாவட்டத்திற்கு உட்பட்ட மகோலி கிராமத்தில் ராணி அவந்திபாய் லோதியின் சிலை திடீரென அகற்றப்பட்டது. இதனால் உள்ளூர் மக்கள் மற்றும் அகில பாரதிய லோதா லோதி மகாசபையைச் சேர்ந்தவர்கள் கடும் ஆத்திரமடைந்தனர். உடனடியாக அந்தச் சிலையைப் மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.

சம்பவ இடத்திலேயே கூடாரங்களை அமைத்து தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், சிலை மீண்டும் நிறுவப்படும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தனர்.

 

பரபரப்பான சூழலில் போராட்டக் களத்திற்கு வந்த MLA  ஜகநாத் சிங் ரகுவன்ஷிக்கு எதிராகக் கிராம மக்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய எம்.எல்.ஏ, விரைவில் சிலை மீண்டும் நிறுவப்படும் என்று உறுதியளித்தார். மேலும், அந்தப் பணிகளுக்காகத் தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ஐந்து லட்ச ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும் வாக்குறுதியளித்தார்.

ஆனால், அரசின் உறுதிமொழியை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தைத் வாபஸ் பெற மறுத்துவிட்டனர். சிலை உடனே நிறுவப்படாவிட்டால் சாலையில் அமர்ந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம் என்றும் அவர்கள் எச்சரித்தனர். இதற்கிடையே, போராட்டத்தை அரசின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லும் நோக்கில், சில போராட்டக்காரர்கள் அருகில் இருந்த செல்போன் கோபுரத்தின் மீது ஏறி விசித்திரமான முறையில் தங்கள் எதிர்ப்பைக் பதிவு செய்தனர்.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடன் அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். காவல்துறையினரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையைச் சமாதானப்படுத்த முயன்று வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.