அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க ராணுவ வீரர்களை கொல்வது அல்லது பிடித்து ஒப்படைப்பவர்களுக்கு 30 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என ஈரான் ராணுவம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரிசுத் தொகை இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.5 கோடியாகும். ஈரான் ராணுவத் தளபதி அமீர் ஹடாமி இந்த அறிவிப்பை வெளியிட்டதாக அந்நாட்டு அரசு ஊடகமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது. ஏராளமானோர் இதுபோன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த திட்டம் உருவாக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க வீரர்களை கொன்று அல்லது பிடித்து ஈரான் ராணுவத்திடம் ஒப்படைத்தால் 30 ஆயிரம் டாலர் அல்லது 5 பில்லியன் ஈரான் டோமன் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் பரிசுத் தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் என்றும் அமீர் ஹடாமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த அறிவிப்பு எங்கு அல்லது எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து அவர் எந்த விவரத்தையும் வெளியிடவில்லை. இதற்கிடையே, மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கைகளை குறைக்க வேண்டும் என்றும் ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்தப் போரில் இதுவரை 17 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் சமீபத்தில் உயிரிழந்தவர்களும் உள்ளனர். இருப்பினும், இதுவரை உயிரிழந்த அமெரிக்க வீரர்கள் அனைவரும் ஈரானுக்கு வெளியே, ஜோர்டான் மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தற்போதைய மோதலின்போது ஈரானுக்குள் அமெரிக்க தரைப்படைகள் நிலைநிறுத்தப்பட்டதாக தகவல் இல்லை. ஏப்ரல் மாதத்தில் விமானப்படை வீரர் ஒருவரை மீட்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மட்டுமே குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
இதற்கிடையில், ஈரானைச் சேர்ந்த மூன்று விமானிகள் கத்தாரில் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக ஈரான் முன்வைத்த குற்றச்சாட்டையும் கத்தார் மறுத்துள்ளது. காணாமல் போன விமானிகளைத் தேடும் பணியை முழுமையாக மேற்கொண்டதாக கத்தார் தெரிவித்துள்ளது. அவர்களில் ஒருவரின் உடல் ஈரானிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஏப்ரல் மாதத்தில் சுமார் 40 நாட்கள் நீடித்த மோதலுக்குப் பிறகு தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டது. பின்னர் அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்த முயற்சிகள் நடந்தாலும், தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது.
