தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஒரு பகுதியில் முத்துக்குமார் (32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தரி என்ற மனைவியும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் இவர் அடிக்கடி வேலைக்காக வெளிநாட்டுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் தாய்லாந்தில் ஒரு நிறுவனத்தில் வேலை இருப்பதாக ஆன்லைனில் பார்த்தார். அதற்கு அப்ளை செய்த அவர், கடந்த 22 ஆம் தேதி தாய்லாந்துக்கு சென்றுள்ளார். அங்கிருந்து அவர் வாட்ஸ் ஆப் மூலம் அவர் மனைவியிடம் பேசியுள்ளார். இதையடுத்து அந்நாட்டின் மொபைல் சிம் கார்டு ஒன்றை வாங்கி விட்டு அறைக்கு சென்றார். பின் அவர் மனைவியிடம் தொடர்பு கொண்டு, நாளை நிறுவனத்தில் இருந்து வந்து தன்னை அழைத்து சென்று விடுவார்கள் என்று கூறியுள்ளார்.
ஆனால் அதன்பின் 10 நாட்கள் ஆகியும் இன்னும் அவரைப் பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை என்று முத்துக்குமாரின் குடும்பத்தினர் கலங்கினர். இதுகுறித்து மனைவி சுந்தரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில் மேற்கண்ட விவரங்கள் இருந்தது. இதனை அறிந்த பாஜக நிர்வாகி, ஆர் சித்ராகந்தன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். முத்துக்குமாரின் மனைவி அவரிடமும் தனது கணவனை மீட்டுத் தருமாறு மனு கொடுத்தார். அதற்கு அவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதற்கிடையில் தாய்லாந்தில் மாயமான முத்துக்குமாரை விரைவாக கண்டுபிடிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்கு ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் வலியுறுத்தியுள்ளார்.