தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கரூரில் நடைபெற்ற நிலையில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இவர்கள் வேலைவாய்ப்பில் தொகுதி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் அமைச்சர் சிவி கணேசன் பேசினார்.
அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்ததால், தமிழகம் முழுவதும் 71 ஆயிரம் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 1,14,000 படித்த இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசால் இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கி தரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வணிகவரி, சுங்கவரி, ரயில்வே உள்ளிட்ட துறைகளில் தேர்வு பெற்ற 71,000 பேருக்கு பிரதமர் மோடியால் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.