சென்னையில் உள்ள மாதவரம் பேருந்து நிலையத்தில் அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைவருமான பி.கே சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். கடந்த 2018-ம் ஆண்டு மாதவரம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட நிலையில், இதனை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், சிறப்பு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சருடன் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வடக்கு நோக்கி செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளையும் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு பதில் தற்போது மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு நோக்கி செல்லும் அனைத்து பேருந்துகளும் இனி மாதவரம் நோக்கி திருப்பி விடப்படும். இது தவிர ஆந்திர மாநில போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு மாதவரத்தில் தங்கும் அறை  வழங்கப்பட்டுள்ள நிலையில் அது பற்றா குறையாக இருப்பதாக புகார்கள் வருவதால் ஊழியர்களுக்கு தங்கும் அறையை விரிவு படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளனர். மேலும் இது தவிர பேருந்து நிலையத்தின் உள் கட்டமைப்புகளில் கழிப்பறை உள்ளிட்ட பல அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும், நுழைவு வாயிலை பிரம்மாண்டமாக அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.